“சனிக்கிழமைகளில் மட்டும் மக்களை சந்திப்பது சரியல்ல” – விஜய் மீது அண்ணாமலை விமர்சனம்

“தவெக தலைவர் விஜய், சனிக்கிழமைகளில் மட்டுமே மக்களை சந்திப்பேன் என்று கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலைமையல்ல. அரசியல்வாதி என்றால் 24 மணி நேரமும் மக்களிடையே இருக்க வேண்டும்” என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாஜக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வமும், டிடிவி தினகரனும் இணைந்து இருக்க வேண்டும் என நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். டிடிவி தினகரன் ஒரு திறமையான தலைவர். எங்களை வழிநடத்துபவர் நயினார் நாகேந்திரன். எங்கும் கருத்து வேறுபாடுகள் இருக்காது. நேரம் எல்லாவற்றையும் சரிசெய்யும். கொஞ்சம் பொறுமை தேவை,” என்றார்.

அவர் தொடர்ந்து, “விஜய் சனிக்கிழமைகளில் மட்டுமே மக்களைப் பார்ப்பேன் என்பதோடு இருக்க முடியாது. திமுகக்கு எதிரி எனச் சொல்லும் தவெக, அதைச் செயலில் காட்ட வேண்டும். அப்போதுதான் மக்கள் நம்பிக்கை வைப்பார்கள். பாஜக தலைவர்களை தினமும் மக்கள் நேரடியாக சந்திக்க முடிகிறது. எங்கள் கட்சியில் கூட்டங்கள் தினந்தோறும் நடக்கின்றன.

செயலில் ஈடுபடும் அரசியல்வாதிகள் 24 மணி நேரமும், வாரத்தின் ஏழு நாட்களும் களத்தில் இருக்க வேண்டும் என்பது மக்களின் அடிப்படை எதிர்பார்ப்பு. நாங்கள் தான் மாற்று எனச் சொல்வது மட்டுமல்லாமல், தவெக முழுநேர அரசியலில் பங்கேற்க வேண்டும். அரசியல் செய்பவர்கள் முழு நேர அரசியலுக்கே அர்ப்பணிக்கப்பட வேண்டும்,” என அண்ணாமலை விமர்சித்தார்.

Facebook Comments Box