அண்ணாமலை காலாவதி ஆனவர் அல்ல: தமிழக பாஜக
அண்ணாமலை காலாவதியானவர் அல்ல; அவரது அரசியல் எதிர்காலத்தை காலமே உறுதி செய்யும் என்று தமிழக பாஜக தெரிவித்துள்ளது.
பாஜக மாநில தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
“திமுகவை கடும் நெருக்கடிக்கும், சிக்கலுக்கும் உள்ளாக்கியவர் முன்னாள் தலைவர் அண்ணாமலை. தனிமனித விமர்சனத்தை தவிர்ப்பது, உயர் கல்வித் துறை அமைச்சர் கோ.வி. செழியன் அவர்களுக்கு நல்லது. கள்ளத்தனம் குறித்து பேசுவதற்கு உங்களுக்கு அருகதையா?
உங்களைப்பற்றி தனிப்பட்ட விமர்சனம் செய்தால் பல விஷயங்கள் வெளிப்படையாகி விடும் என்பதை அறியாமல் இருப்பது வியப்பாகும். அண்ணாமலையால் திமுகவினர் தூக்கமின்றி தவித்ததும், இன்னும் தவித்துக் கொண்டிருப்பதும் உலகறிந்த உண்மை.
பாஜகவில் குடும்ப அரசியலும், வாரிசு அரசியலும் இல்லை என்பதை கூடத் தெரியாமல், அமைச்சர் இவ்வாறு விமர்சித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
திமுகவில் சொல்லப்படுவது பதவி; பாஜகவில் அது பொறுப்பு. அது மாறிக்கொண்டே இருக்கும் என்பதை உணருங்கள். அண்ணாமலை காலாவதியானவர் அல்ல. அண்ணாமலையின் அரசியல் எதிர்காலத்தை காலமே உறுதி செய்யும். அப்போது நீங்கள் தான் காலாவதியாக இருப்பீர்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள். மாற்றம் ஒன்றே மாறாதது” என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக, அமைச்சர் கோ.வி. செழியன், “அண்ணாமலை தமிழகத்துக்கு பின்னடைவுகளை உருவாக்கியவர்; அவர் காலாவதியான அரசியல் தலைவர்” என்று விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.