“காசா பிரச்சினைக்கு மோடியே காரணம் எனக் கூறுவது கீழ்த்தர அரசியல்” – தமிழிசை கண்டனம்
காசாவில் நடைபெறும் பிரச்சினைக்கு பிரதமர் மோடியை காரணமாக குற்றம் சாட்டுவது மிகவும் கீழ்த்தரமான அரசியல் என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடுமையாக விமர்சித்தார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காசா பிரச்சினைக்கு பிரதமர் மோடியே காரணம் என்று சிலர் பேசுகிறார்கள். அவர்களது அந்த வகை அரசியல் கண்டிக்கத்தக்கது. பிரதமர் மோடியின் அருகே கூட போக முடியாதவர்கள், இப்படி குற்றம் சாட்டுகிறார்கள்.
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது அவர்கள் எங்கே இருந்தார்கள்? கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து பலர் உயிரிழந்தபோது அவர்கள் எங்கு சென்றார்கள்? அப்போது கவலைப்படாதவர்கள் இப்போது அடுத்த நாட்டின் பிரச்சினையில் பேச வருகிறார்கள். முதலில் தமிழகத்தில் உள்ள மக்கள் பிரச்சினைகளிலும் அவலங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.
காங்கிரஸ் கட்சி, திமுகவின் அடிமைத்தனத்தில் சிக்கியுள்ளது. நாங்கள் கேட்கும் தொகுதிகளை தரவில்லை என்றால் கூட்டணியை விட்டு விலகுவோம் எனச் சொல்லும் தைரியம் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு உண்டா? தேர்தல் நெருங்கும் போது தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்பெறும். ‘இண்டியா’ கூட்டணியில் உடன்பாடு பிரச்சினைகள் எழும். அவர்களால் ஒற்றுமையாக தேர்தலை சந்திக்க முடியாது. தமிழகத்தில் மிகவும் மோசமான ஆட்சி நடைபெற்று வருகிறது. விஜய்யின் தாக்குதல் திமுக மீது மட்டுமே இருக்க வேண்டும். திமுகவை வீடு திரும்பச் செய்ய விஜய்யும் பங்கு பெற வேண்டும்” என்றார்.
இதற்கு முன், காசா மீது இஸ்ரேல் நடத்திய போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி, பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை பேரணி நடைபெற்றது. புதுப்பேட்டை லெனின்சு தோட்டச் சாலையில் தொடங்கிய அந்த பேரணி, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நிறைவடைந்தது.
பொதுக்கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா, விசிக தலைவர் திருமாவளவன், மனிதநேய ஜனநாயகக் கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி, இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், நடிகர்கள் சத்யராஜ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.