தமிழகத்தில் மோசமான ஆட்சி நடப்பதால் விஜய்யின் தாக்குதல் திமுக மீது மட்டுமே இருக்க வேண்டும்: தமிழிசை கருத்து
தமிழகத்தில் மோசமான ஆட்சி நடந்து கொண்டிருப்பதால் விஜய்யின் தாக்குதல் திமுக மீது மட்டுமே இருக்க வேண்டும் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: காசாவில் நடக்கும் பிரச்சினைக்கு பிரதமர் மோடிதான் காரணம் எனச் சொல்லி மிகவும் கீழ்த்தரமான அரசியலை சிலர் செய்து கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது அவர்கள் எங்கு சென்றார்கள். கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து இறந்தார்களே அப்போது எங்கே போனார்கள்?இதை பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படவில்லை.
ஆணவப்படுகொலை நடக்கும் போது அதைப்பற்றி பேச ஆள்இல்லை. முன்பு அடுத்த மாநிலத்தை பற்றி பேசி கொண்டிருந்தார்கள். இப்போது அடுத்த நாட்டை பற்றி பேச போய்விட்டார்கள். முதலில் தமிழகத்தில் நடக்கும் அவலங்களையும், மக்கள் விரோத பிரச்சினைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். காங்கிரஸை திமுகதான் அடிமைப்படுத்தி வைத்துள்ளது. நாங்கள் கேட்கும் தொகுதிகளை கொடுக்கவில்லையென்றால், கூட்டணியில் இருந்து வெளியேவருவோம் என சொல்லும் அளவுக்கு காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு துணிச்சல் இருக்கிறதா?
அவர்களால் ஒற்றுமையாக தேர்தலை சந்திக்க முடியாது. தமிழகத்தில் மிக மோசமான ஆட்சிநடந்து கொண்டிருக்கிறது. எனவே, விஜய்யின் தாக்குதல் திமுக மீது மட்டுமே இருக்கட்டும். அவர்களை வீட்டுக்கு அனுப்புவதில் விஜய்யின் பங்கும் இருக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.