“இதுவரை அதிகரித்த வரியை குறைத்த ஒரே அரசு பாஜக தான்” – நயினார் நாகேந்திரன்
சுதந்திரத்திற்கு பிந்தைய காலத்தில் அதிகரிக்கப்பட்ட வரிகளை குறைத்த அரசு பிரதமர் நரேந்திர மோடியின் அரசு தான் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்குட்பட்ட 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு திண்டுக்கல்லில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் கதலி நரசிங்கப் பெருமாள் முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ராமசீனிவாசன், தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ., முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை, தேசிய செயற்குழு உறுப்பினர் பொன். ராதாகிருஷ்ணன், தேசிய இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தேசிய பொறுப்பாளர் அரவிந்த் மேனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இந்த நிகழ்வில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“பாஜக அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் திண்டுக்கல்லில் மூன்று மாவட்டங்களுக்கான பூத் கமிட்டி மாநாடு நடத்தப்படுகிறது. இன்று முதல் ஜிஎஸ்டி வரி குறைப்பை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இதனால் ஒரு குடும்பம் முன்பு ஒரு பொருள் வாங்கியிருந்தால் இப்போது இரண்டு பொருளை வாங்கும் அளவிற்கு சலுகை கிடைக்கும்.
கட்டிடப் பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. குறைக்காவிட்டால் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். டூத்பிரஷ், சோப்பு போன்ற அன்றாட பயன்பாட்டு பொருட்களின் மீதும் வரி குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களின் வாங்கும் திறன் உயரும். வாங்கும் போது உற்பத்தி அதிகரிக்கும். உற்பத்தி உயர்ந்தால் வேலைவாய்ப்பு கூடும். நவராத்திரி தொடக்க நாளில் பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இணைந்து இந்த வரி குறைப்பை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
பிற தலைவர்கள் தீபாவளி வாழ்த்து சொல்லாமல், வேறு நிகழ்வுகளுக்கு மட்டும் வாழ்த்து தெரிவிப்பார்கள். ஆனால் பிரதமர் தீபாவளி வாழ்த்துடன், அந்நாளில் மக்கள் அனைவரும் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் ஜிஎஸ்டி வரி குறைப்பை கொண்டு வந்துள்ளார்.
இந்தியாவில் சுதந்திரம் கிடைத்த பிறகு வரிகளை அதிகரிக்காமல், குறைத்த ஒரே அரசு நரேந்திர மோடியின் அரசு தான். இதுவரை எந்த அரசு வரிகளை குறைத்ததே இல்லை,” என்றார் நயினார் நாகேந்திரன்.