திமுகவை கண்டித்து 2 மாதம் பாஜக தொடர் ஆர்ப்பாட்டம்
போலி வாக்குறுதிகள் அளித்து மக்களை ஏமாற்றியதாக திமுக ஆட்சியை எதிர்த்து, சட்டப்பேரவை தொகுதிவாரியாக 2 மாதங்கள் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட உள்ளதாக தமிழக பாஜக அறிவித்துள்ளது.
இதுகுறித்து பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் மற்றும் தமிழக பாஜக செயலாளர் வினோஜ் பி.செல்வம் தெரிவித்ததாவது: கடந்த 4 ஆண்டுகளில் தமிழக மக்களை எண்ணற்ற சிரமங்களுக்கு உள்ளாக்கியதோடு மட்டுமல்லாமல், மீண்டும் கவர்ச்சிகரமான போலி வாக்குறுதிகள் அளித்து, வாக்காளர்களுக்கு பணத்தை வழங்கும் முறையிலேயே திமுக மீண்டும் ஆட்சிக்கு வரலாம் என்று கனவு கண்டு வருகிறது.
மக்களை திமுக எவ்வாறு ஏமாற்றி வருகிறது, இந்த ஆட்சியில் ஏற்பட்டுள்ள பெரும் தோல்விகள் என்னென்ன என்பதையெல்லாம் மக்களிடம் எடுத்துச் சொல்வது ஜனநாயகத்திற்கு நம்பிக்கை கொள்பவர்களின் கடமை. அதன்படி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தலின்படி மாநிலம் முழுவதும் சட்டப்பேரவை தொகுதிவாரியாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளன.
இதற்கிணங்க அக்டோபர் 5 முதல் நவம்பர் 30 வரை ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளன. குறிப்பாக 2011 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் ஆட்சியிலிருந்து விலகி சோர்வடைந்த திமுக, அடுத்து ஆட்சிக்கு வருவதற்காக நிறைவேற்ற இயலாத கவர்ச்சிகரமான போலி வாக்குறுதிகளை மழையென வழங்கியது. ஆட்சிக்கு வந்தபின் மக்களை எப்படி ஏமாற்றியது என்பதையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டங்கள் அமையவுள்ளன.
இதற்காக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடங்கள், தேதிகள், நேரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.