“திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்க வேண்டும்” – தமிழிசை

‘சமூக நீதியை முதல்வர் ஸ்டாலின் பின்பற்றுகிறார் என்றால், விசிக தலைவர் திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும்’ என பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “அதிமுக, பாஜகவை பற்றியே பேசிக் கொண்டிருக்கும் திமுக அரசு, மக்கள் பிரச்சினையைப் பற்றி கவலைப்படுவதில்லை.

மதுரை அருகே விடுதி ஒன்றில் 14 வயது மாணவரை நிர்வாணப்படுத்தி சக மாணவர்களே கொடூரத் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதேபோல் திருச்சி அருகே பாதாளச் சாக்கடை அடைப்பை சரி செய்து கொண்டிருந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலேயே பாதாளச் சாக்கடை சுத்தம் செய்வதில் அதிகமான உயிரிழப்பு, தமிழகத்தில்தான் நடைபெறுகிறது.

அதேபோல், சமூக நீதியைப் பற்றி பேசும் தமிழக அரசு, கரோனா காலத்தில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு, அவர்கள் கேட்கும் ஊதியத்தை கொடுக்க மனம் இல்லாமல், உச்ச நீதிமன்றம் சென்றது. அதேநேரம், உச்ச நீதிமன்றமோ, ‘இலவசங்கள், விளம்பரங்கள் செய்வதற்குப் பணம் இருக்கிறது. செவிலியர்களுக்கு ஊதியம் கொடுக்க பணம் இல்லையா?’ என கேள்வி கேட்டு, தமிழக அரசுக்கு குட்டு வைத்திருக்கிறது.

மக்களுக்கு மத்திய அரசு எந்த நல்லது செய்தாலும், திமுகவுக்குப் பிடிப்பதில்லை. சமூக நீதியை முதல்வர் ஸ்டாலின் பின்பற்றுகிறார் என்றால், மீதம் இருக்கும் 6 மாதத்துக்கு துணை முதல்வர் பதவியை திருமாவளவனுக்கு அவர் வழங்க வேண்டும்” என்று தமிழிசை கூறினார்

Facebook Comments Box