‘திமுகவும், நடிகர் விஜயும், சீமான் (செபாஸ்டின் சைமன்) இனி தமிழக மக்களை மயக்க முடியாது’ – பாஜக
திமுகவுடன் கை கோர்த்து நடிகர் விஜய் நடத்தி வரும் இந்த அரசியல் நாடகத்தை தமிழக மக்கள் தெளிவாக உணர்ந்து விட்டனர். திமுகவும், நடிகர் விஜயும், சீமானும் இனி மக்களை மயக்க முடியாது என தமிழக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட குறிப்பில், “தமிழகத்தில் மக்கள் நலனுக்கான அரசியல் மறைந்து, வாக்கு மோசடிக்கான தேர்தல் அரசியல் அதிகரித்து விட்டது.
முன்னொரு காலத்தில் மக்கள் நல விரைவுத் திட்டங்கள், நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கான தொலைநோக்கு திட்டங்கள், மக்களின் உணவு, குடிநீர், கல்வி, சுகாதாரம், தொழில் வளர்ச்சி போன்ற துறைகளுக்கான கொள்கை சார்ந்த முயற்சிகளை முன்வைத்து மக்களிடம் வாக்கு கேட்பதே ஜனநாயகத்தின் அடிப்படை அம்சமாக இருந்து வந்தது.
ஆனால் இன்று, யார் அதிகமாக ஊழலில் ஈடுபட்டார்கள்? யார் தேர்தலை வியாபாரம் போல நடத்தி, விளம்பர அரசியல், லாட்டரி அரசியல், இலவச பொருட்கள் அரசியல், கூட்டணிகளை உடைக்கும் அரசியல் என மக்கள் நலனையும், நாட்டின் முன்னேற்றத்தையும் புறக்கணித்து செயல்படுகிறார்கள் என்பது வெளிப்படையாக தெரிகிறது.
இந்த ஊழல், விளம்பர தேர்தல் அரசியலில் ஆயிரக்கணக்கான கோடிகளை திமுக முதலீடு செய்து, மீண்டும் தமிழகத்தை ஏமாற்ற திட்டமிட்டு வருகிறது. திமுகவை வீழ்த்த வல்ல கூட்டணியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வழிகாட்டுதலின் கீழ், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் ஒருங்கிணைப்பில் மக்கள் ஆதரவைப் பெற்று வருகிறது.
மக்கள் கூட்டம் எங்கு சென்றாலும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பிரசாரம் திமுக எதிர்ப்பு சக்தியாக பெருகிக் கொண்டிருக்கிறது. விரைவில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் பிரசாரத்தை தொடங்கவுள்ளார்.
திமுகவின் ஊழல் அரசியல் சூழ்ச்சியின் காரணமாக, நடிகர் விஜய்யின் வெற்றிக் கழகம் திமுக வலையில் சிக்கி விட்டது. அவர் நடத்தும் கூட்டங்கள், தேர்தல் சுற்றுப்பயணங்கள் அனைத்தும் விளம்பர அரசியல், பண அடிப்படையிலான முயற்சிகள் மட்டுமே. பாஜக, மத்திய அரசு, மத்திய திட்டங்கள் குறித்து விஜய் பேசுவது தெளிவின்றி, ஒருவித கற்பனை நாடகமாக உள்ளது.
விஜய் இனிமேனும் சூழ்ச்சி அரசியலை விட்டு, மக்கள் நல அரசியலை முன்னிறுத்த வேண்டும். தற்போது திமுகவிற்கு மாற்றாக அதிமுக-பாஜக கூட்டணி மட்டுமே மக்களின் மனதில் வலுவாக நிலை கொண்டிருக்கிறது.
ஆனால் திமுக, எதிர்ப்பு வாக்குகள் அதிமுக-பாஜக கூட்டணிக்கு செல்லாமல் தடுப்பதற்காகவே, நடிகர் விஜயை தமது அரசியல் களத்தில் எதிர்த்துப் பேசும் தலைவராக காட்டுகிறது. இதற்காகவே சீமான் பல்வேறு இடங்களில் விஜயை விமர்சித்து, மோசமான வார்த்தைகள் பயன்படுத்தி செயற்கை அரசியல் சூழ்நிலை உருவாக்குகிறார்.
சீமான் இந்து கடவுள்களைப் பற்றி பேசுவதை நிறுத்த வேண்டும். அவருக்கு எடுத்துக்காட்டுகள் தேவைப்பட்டால் வேதம், பைபிள் ஆகியவற்றிலிருந்து எடுத்துக்கொள்ளலாம். இது அவருக்கான கடைசி எச்சரிக்கை.
ஆக, திமுகவின் தேர்தல் “பென் வார் ரூம்” திட்டத்தின் கீழ், விஜய்-ஸ்டாலின் ஒருவரை ஒருவர் மறைமுகமாக ஆதரித்து நடிப்பது இந்த அரசியல் நாடகத்தின் ஓர் அங்கமே.
முடிவில், திமுகவும், நடிகர் விஜயும், சீமான் (செபாஸ்டின் சைமன்) இனி தமிழக மக்களை ஏமாற்ற முடியாது. 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள், பிரதமர் நரேந்திர மோடியின் பொற்கால ஆட்சியை, மறைந்த எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோர் வழங்கிய மக்கள் நல ஆட்சியை மீண்டும் ஏற்படுத்துவார்கள். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்,” என பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் பிரசாத் தெரிவித்துள்ளார்.