கரூர் விபத்து: ஹேமமாலினி தலைமையில் பாஜக ஆய்வுக் குழு
கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சம்பவத்தை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திக்க 8 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்துள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா அறிவித்துள்ளார். இந்தக் குழுவை ஹேமமாலினி எம்.பி. தலைமையில் பாஜக அமைத்துள்ளது.
இதுகுறித்து பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்ட அறிக்கையில்,
“கரூரில் நடந்த தவெக கூட்ட நெரிசலில் உயிரிழந்தோருக்கு ஜெ.பி. நட்டா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். காயமடைந்தோர் விரைவில் நலம் பெற வேண்டுமெனவும் அவர் பிரார்த்தித்துள்ளார்.
கூட்ட நெரிசலுக்கான காரணங்களை ஆராய்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து விரைவாக அறிக்கை சமர்ப்பிக்க, 8 பேர் கொண்ட குழுவை நட்டா அறிவித்துள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்ந்த இக்குழு விரைவில் கரூருக்கு வரவுள்ளது.
குழுவின் ஒருங்கிணைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் ஹேமமாலினி இருப்பார். குழுவில் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, முன்னாள் டிஜிபி பிரஜ் லால், சிவசேனாவின் ஸ்ரீகாந்த் ஷிண்டே, அப்ரஜிதா சாரங்கி, ரேகா ஷர்மா, தெலுங்கு தேசம் கட்சியின் புட்ட மகேஷ் குமார் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்,” என அவர் தெரிவித்தார்.