கரூர் நெரிசல் காரணங்களை ஆய்வு செய்ய ஹேமமாலினி தலைமையில் 8 எம்.பிக்கள் குழு – பாஜக அறிவிப்பு
கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவத்தின் காரணங்களை ஆய்வு செய்யும் நோக்கில், தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த 8 எம்.பிக்கள் அடங்கிய குழுவை பாஜக அமைத்துள்ளது. அந்தக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ஹேமமாலினி நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்ட அறிக்கையில், “கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்தது குறித்து பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறார்” என கூறப்பட்டுள்ளது.
ஜெ.பி. நட்டா அறிவித்துள்ள குழுவில் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ் லால், அபராஜிதா சாரங்கி, ரேகா சர்மா (பாஜக), ஸ்ரீகாந்த் ஷிண்டே (சிவசேனா), புட்டா மகேஷ் குமார் (தெலுங்கு தேசம் கட்சி) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழுவினர் விரைவில் கரூருக்கு சென்று, உயிரிழந்தோர் குடும்பத்தினரைச் சந்தித்து, சம்பவத்துக்கான காரணங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளனர் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.