“யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை” – கரூரில் நிர்மலா சீதாராமன் கருத்து

கரூரில் நடந்த கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்தில் யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில், நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிர்மலா சீதாராமன், எல்.முருகன் ஆகியோர் நேற்று ஆறுதல் கூறினர். சம்பவம் நடந்த வேலுசாமிபுரத்திற்கும் சென்று பார்வையிட்டுள்ளனர்.

பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

“நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கும் ஆறுதல் தெரிவிப்பதே பிரதமர் மோடி எங்களை அனுப்பிய நோக்கம். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினோம். பலர் இப்போது பேச முடியாத அளவுக்கு துக்கத்தில் உள்ளனர். பெரும்பாலானவர்கள் ஏழை மக்கள்.”

அவர் மேலும் கூறியதாவது:

“இந்த சம்பவத்தில் எந்த கட்சியையும் குறிப்பிட விரும்பவில்லை. யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை. நாட்டில் இதுபோன்ற சம்பவம் இனி எங்கும் நடக்கக்கூடாது. இங்கு பார்த்த விஷயங்களை பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு தெரிவிப்போம்.”

உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படுவதாக பிரதமர் அறிவித்துள்ளார். இதற்காக, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட விவரங்களை மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர். அவர்களும் உடனடியாக அனுப்புவதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்த போது பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் எம்எல்ஏ உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Facebook Comments Box