“செந்தில் பாலாஜியின் கலக்கம் சந்தேகத்தை தூண்டுகிறது” – அண்ணாமலை

நீதிமன்றமும், விசாரணைக் குழுவும் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், செந்தில் பாலாஜி இவ்வளவு கலங்குவது தான் பல கேள்விகளை எழுப்புகிறது என முன்னாள் தமிழக பாஜகத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில், “கரூர் தவெக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மக்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பிக்கள் குழு பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து, இந்த துயரச்சம்பவத்துக்கு உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.

இந்நிலையில் இன்று ஊடகங்களைச் சந்தித்த கரூர் திமுக எம்எல்ஏவும் முன்னாள் சாராய அமைச்சருமான செந்தில் பாலாஜி, புதிய கதைகளை கூறியுள்ளார். தவெக தரப்பில் சிபிஐ விசாரணை கோரிய வழக்கு வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வர உள்ளது. கூட்டத்தில் விஜய் மீது செருப்பு வீச்சு உள்ளிட்ட அசம்பாவிதங்களுக்கு ஆதாரம் இருப்பதாக தவெகவினர் கூறியுள்ளனர். விசாரணையின் போது வழக்கறிஞர்கள் சமர்ப்பிக்கும் ஆதாரங்களை ஏற்கலாமா மறுக்கலாமா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும்.

மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியின் உண்மை கண்டறியும் குழுவிடம் ஒரு பெண் கூட்டத்தில் கத்திக்குத்து நடந்ததாக தெரிவித்துள்ளார். இத்தகைய குற்றச்சாட்டுகள் இருக்கும் போது, செந்தில் பாலாஜி ஊடகச் சந்திப்பு நடத்தி, அவை அனைத்தும் வதந்தி என்று சொல்ல வேண்டிய காரணம் என்ன?

கூட்டம் நடந்த கரூர் வேலுசாமிபுரம், கூட்டம் நடத்தத் தகுதியான இடமா என்பதை விசாரிக்க, திமுக அரசே ஆணையம் அமைத்துள்ள நிலையில், அதைப் பற்றி செந்தில் பாலாஜி பேச வேண்டிய அவசியம் என்ன? கருத்தை திணிக்க முயல்வதன் நோக்கம் என்ன என்ற கேள்விகள் எழுகின்றன.

யார் எங்கே சென்றார்கள், செல்லவில்லை என்று கேட்கும் உரிமை திமுகவிற்கு உண்டா? கள்ளக்குறிச்சியில் திமுக சாராய வியாபாரிகள் விற்ற கள்ளச்சாராயம் 66 பேரின் உயிரை காவுகொண்டபோது அங்கு செல்லாத முதலமைச்சர், தென் மாவட்டங்கள் பெரு மழையால் பாதிக்கப்பட்டபோது மக்களைச் சந்திக்காமல் இந்தி கூட்டணி சந்திப்புகளுக்காக டெல்லி சென்ற முதலமைச்சர், இப்போது மட்டும் உடனே வந்ததன் பின்னணி மக்களுக்கு தெரியும்.

நீதிமன்றமும், விசாரணை ஆணையமும் நடவடிக்கை எடுத்து வரும் சூழலில், முன்னாள் சாராய அமைச்சர் இவ்வளவு கலங்குவது தான் பல்வேறு சந்தேகங்களை தூண்டுகிறது” என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

Facebook Comments Box