கரூர் நெரிசல் விசாரணை – உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் நடத்த வேண்டும்: பாஜக கூட்டணி எம்.பி.க்கள் குழு வலியுறுத்தல்

கரூரில் கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பதவியில் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாஜக கூட்டணி எம்.பி.க்கள் குழு வலியுறுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை ஆய்வு செய்யவும், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கவும், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உத்தரவின் பேரில் எம்.பி. ஹேமமாலினி தலைமையில் எட்டு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதில் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா உள்ளிட்ட பாஜக மற்றும் கூட்டணி எம்.பி.க்களும் இடம்பெற்றனர்.

அதன்படி, குழுவினர் நேற்று கரூர் வந்து, வேலுசாமிபுரத்தில் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பின்னர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்த நிலையில் சிகிச்சை பெறுபவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹேமமாலினி, அனுராக் தாக்கூர் ஆகியோர்,

“இந்த குடும்பங்களைச் சந்தித்தபோது அவர்கள் கூறிய துயரங்களை கேட்டு மனம் மிகுந்து விட்டது. நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும் அரசியல் கட்சியினர் சரியான இடத்தை தேர்வு செய்ய வேண்டும். மிகவும் குறுகிய இடத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டமிட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் என்ன செய்தது? காவல்துறை எங்கே? ஏற்பாட்டாளர்கள் என்ன நடவடிக்கை எடுத்தனர்? என்பன போன்ற பல கேள்விகள் எழுகின்றன.

குறுகிய சாலையில் அனுமதி வழங்கியதே தவறு. விஜய் பேசிக் கொண்டிருந்தபோது காலணி, பாட்டில்கள் வீசப்பட்டதாகவும், ஜெனரேட்டர் செயலிழந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கு ஆளுங்கட்சியான திமுக அரசு, ஏற்பாட்டாளர்கள் இருவரும் விளக்கம் அளிக்க வேண்டும்.

இந்த சம்பவத்தில் உண்மை வெளிச்சத்துக்கு வர, சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணை அவசியம். அதற்காக தற்போது பதவியில் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். நாங்கள் எட்டு கேள்விகளை எழுப்பி, விசாரணை அதிகாரிகளுக்கும், ஏற்பாட்டாளர்களுக்கும் வழங்குகிறோம். ஒரு வாரத்துக்குள் பதில் பெற்று, அதனுடன் பாதிக்கப்பட்டோரின் கருத்துகளையும் இணைத்து அறிக்கை தயாரித்து பாஜக தலைமையிடம் அளிப்போம்” என்றனர்.

இந்நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Facebook Comments Box