தமிழர் மரபைக் குறிக்கும் கல் மண்டபங்களை அரசு புதுப்பித்து பாதுகாக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்
தமிழர் பண்பாட்டின் சின்னமாக விளங்கும் கல் மண்டபங்களை அரசு உடனடியாக புதுப்பித்து மறுசீரமைக்க வேண்டும் என்றும், ஆபத்தான நிலையில் சிதிலமடைந்துள்ள மண்டபங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) பக்கத்தில் பதிவிட்டதாவது:
“தமிழகத்தில் விழுப்புரம், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க கல் மண்டபங்கள் சரியான பராமரிப்பில்லாமல் சிதிலமடைந்து காணப்படுவது மிகவும் வருத்தமளிக்கிறது. ஒரு காலத்தில் மன்னர்களும் வழிப்போக்கர்களும் தங்கிய இளைப்பாறும் அன்னச்சத்திரங்களாக விளங்கிய இம்மண்டபங்கள், திமுக ஆட்சியில் தற்போது சமூக விரோதிகளின் தங்குமிடங்களாக மாறி வருகின்றன.
தமிழ்மொழி மற்றும் பண்பாட்டின் காவலராக தன்னை காட்டிக் கொள்ளும் முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழ் மன்னர்களின் கலை நயத்தையும் கருணையையும் பிரதிபலிக்கும் இந்த கல் மண்டபங்களின் நிலையைப் புறக்கணிப்பது ஏன்? தந்தையின் பேனாவுக்காக கோடிக்கணக்கில் சிலை நிறுவுவதிலும், மகனுக்காக கார் பந்தயம் நடத்துவதிலும் ஆர்வம் காட்டும் முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழர் மரபின் அடையாளமாக உள்ள இந்த மண்டபங்களை காப்பாற்றும் எண்ணம் ஏன் இல்லை?
நம் பண்டைய கலாச்சாரத்தின் கண்ணாடியாகத் திகழும் கல் மண்டபங்கள் இன்று சிதிலமடைந்து போவது வரலாற்று இழப்பாகும். எனவே, அவற்றை அரசு விரைவாக புதுப்பித்து மறுசீரமைக்க வேண்டும். அதுவரை ஆபத்தான நிலையில் உள்ள மண்டபங்களில் மக்கள் நுழைவதைத் தடை செய்ய வேண்டும்,” என நயினார் நாகேந்திரன் தனது பதிவில் கூறியுள்ளார்.