“ஆளுநரை எதிரியாக சித்தரித்து வருகிறது திமுக அரசு” — எல். முருகன் கருத்து
தமிழக ஆளுநரை திமுக அரசு எதிரியாக சித்தரிக்கிறது என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பாஜக முகாம் அலுவலகத்தில், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்ட முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
“தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, திமுக அரசின் ஊழலுக்கு தடையாக இருப்பதால், தமிழக அரசு அவரை எதிரியாக சித்தரித்து வருகிறது.
திமுகவுக்கு எதிராக செயல்படும் ஊடகங்களை அரசு கேபிள் சேனல் வழியாக முடக்குவது, சமூக வலைதளங்களில் திமுகவுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களை கைது செய்வது போன்ற நடவடிக்கைகள் கருத்து சுதந்திரத்தை முற்றிலும் கட்டுப்படுத்தும், எமர்ஜென்சி காலத்தை நினைவூட்டுகின்றன.
மேலும், கரூர் துயர சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை வெளிவரும் முன், அரசியல் ரீதியாக அதன்பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை,” என எல். முருகன் தெரிவித்தார்.