WhatsApp Channel
உலகில் ஊழல் குறைந்த நாடாக டென்மார்க் பட்டியலிடப்பட்டுள்ளது.
டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அரசு சாரா அமைப்பு, உலகில் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டது. இந்த அமைப்பு உலகில் உள்ள 180 நாடுகளை ஆய்வு செய்து தரவரிசைப்படுத்துகிறது. நிர்வாக வெளிப்படைத்தன்மை, லஞ்சம், ஊழல் மற்றும் முறைகேடுகள் போன்ற காரணிகள் ஆராயப்படுகின்றன.
இந்தக் காரணிகளில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற நாடு ஊழலற்ற நாடாக முதலிடத்தைப் பெறுகிறது. பூஜ்ஜியம் (0) மதிப்பெண் பெறும் நாடு மிகவும் ஊழல் நிறைந்த நாடு என்று குறிப்பிடப்படுகிறது.
இந்த வகையில் இந்த ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மொத்தமுள்ள 180 நாடுகளில் எந்த நாடும் 100க்கு 100 மதிப்பெண் பெற்றதில்லை.இந்தப் பட்டியல் உலகம் முழுவதும் ஊழல் இருப்பதைக் காட்டுகிறது. டென்மார்க் 90 மதிப்பெண்களுடன் ஊழல் குறைந்த நாடாக முதல் இடத்தைப் பிடித்துள்ளது. பின்லாந்து 87 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், நியூசிலாந்து 85 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளன.
கடந்த ஆண்டு 85வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு 93வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 40 மதிப்பெண்கள் பெற்ற நிலையில், இந்த ஆண்டு 39 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதேபோல், கஜகஸ்தான், லெசோதோ மற்றும் மாலத்தீவுகள் 39 மதிப்பெண்களுடன் இந்தியாவுடன் 93வது இடத்தைப் பகிர்ந்து கொள்கின்றன.
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் 133வது இடத்திலும், இலங்கை 115வது இடத்திலும், சீனா 76வது இடத்திலும் உள்ளன. சோமாலியா 11 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.
Discussion about this post