WhatsApp Channel
நாடாளுமன்றத்தில் அத்துமீறல்கள் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர்.
நேற்று மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர்கள் வண்ண புகை குண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத் தாக்குதலின் ஆண்டு நினைவு தினத்தன்று நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக 8 பாதுகாப்பு அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஜனநாயகத்தின் கோயிலாக கருதப்படும் நாடாளுமன்ற வளாகத்துக்குள் நடந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடியது. அப்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று நாடாளுமன்றத்தில் அத்துமீறல் மற்றும் பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரணை நடத்தி, உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிக்கை தாக்கல் செய்யக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.
கூச்சல் குழப்பம் காரணமாக அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டது. ராஜ்யசபாவில் கடும் அமளியில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் சபையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதன்படி, நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு இல்லாதது குறித்து விவாதம் நடத்தக் கோரி காங்கிரஸ் எம்.பி.க்கள் டி.என்.பிரதாபன், டீன் குரியாகோஸ், எஸ்.ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், எச்.ஒய்.பி.ஈட்டன் ஆகியோர் லோக்சபா கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மக்களவை நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கிய நிலையில், திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 9 எம்பிக்கள் அமர்வு முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன் படி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பென்னி பெஹனன், வி.கே.ஸ்ரீகண்டன், முகமது ஜாவேத், பி.ஆர்.நடராஜன், கனிமொழி கருணாநிதி, கே.சுப்ரமணியம், எஸ்.ஆர்.பார்த்திபன், எஸ்.வெங்கடேசன், மாணிக்கம் தாக்கூர் ஆகியோர் “கட்டுப்பாடற்ற நடத்தை”க்காக உள்ளனர். லோக்சபா கூட்டத்தொடர் முழுவதும் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, லோக்சபாவில் இருந்து 14 எம்.பி.க்கள், ராஜ்யசபாவில் இருந்து ஒரு எம்.பி., என மொத்தம் 15 எம்.பி.க்கள் இன்று பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து மக்களவை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Discussion about this post