WhatsApp Channel
அபுதாபியில் ‘அஹ்லான்’ மோடி என்ற பெயரில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
இந்திய பிரதமர் மோடி 2015 ஆம் ஆண்டு முதல் முறையாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அதிகாரப்பூர்வ பயணமாக சென்றார். அப்போது, ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்திய இந்துக்களுக்கு அபுதாபியில் இந்து கோவில் கட்ட வேண்டும் என்ற மோடியின் கோரிக்கையை ஐக்கிய அரபு அமீரக அரசு ஏற்றுக்கொண்டது.
இதையடுத்து, துபாய்-அபுதாபி ஷேக் சயீத் சாலையில் அல் ரக்பா அருகே உள்ள முரைக்கா பகுதியில் இந்து கோவில் கட்ட அபுதாபி அரசால் 55,000 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து, 2018ல் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.பிரதமர் மோடி துபாயில் இருந்து காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டு விழாவை துவக்கி வைத்தார். இதையடுத்து, கடந்த சில ஆண்டுகளாக கோவில் கட்டும் பணி நடந்து வந்தது.
அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்து கோவில் கும்பாபிஷேகத்துடன் நாளை திறக்கப்படுகிறது. கோவில் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
இந்நிலையில் பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றார். அங்கு பிரதமர் மோடியை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் வரவேற்றார். இதையடுத்து, பிரதமருக்கு ராணுவ மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அபுதாபியில் ‘அஹ்லான்’ மோடி என்ற பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தினரை பிரதமர் மோடி சந்திக்கிறார். இந்த நிகழ்ச்சியில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.
அபுதாபி சயீத் ஸ்போர்ட்ஸ் சிட்டி ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் 700 நடனக் கலைஞர்கள் பங்கேற்கவுள்ளனர். கலை நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி பார்க்கிறார். மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் இந்திய மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
துபாய்-அபுதாபி ஷேக் சயீத் சாலையில் உள்ள அல் முராக்கா பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்து கோவிலை பிரதமர் மோடி இன்றைய நிகழ்ச்சிகளை முடித்து நாளை திறந்து வைக்கிறார்.
Discussion about this post