மும்பை பெண் குழந்தையை கடத்தி கோவையில் ரூ.4.8 லட்சத்துக்கு விற்பனை 11 பேர் கைது; பரபரப்பு தகவல்கள்

0
34

கோவை: மும்பையில் இருந்து 4 மாத பெண் குழந்தையை கடத்தி கோவையில் ரூ.4.8 லட்சத்துக்கு விற்றது தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர். மும்பை கிர்காவ் பகுதியை சேர்ந்த அன்வாரி அப்துல் ஷேக் (50) என்ற பெண், விபி ரோடு காவல் நிலையத்தில் கடந்த 3ம் தேதி ஒரு புகார் கொடுத்தார். அதில் இப்ராகிம் அல்தாப் ஷேக் (32) என்பவர், 4 மாத பெண் குழந்தையை கடத்தி சென்று தமிழகத்தில் விற்பனை செய்துவிட்டதாகவும், அந்த குழந்தையை மீட்டுத்தர வேண்டும் என்றும் கூறியிருந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில் குழந்தையை கோவை செல்வன்பட்டியை சேர்ந்த சிவில் இன்ஜினியர் ஆனந்த் குமார் நாகராஜன் என்பவரிடம் விற்பனை செய்தது தெரியவந்தது.

இது தொடர்பாக மும்பை போலீசார் கூறியதாவது: இப்ராகிம் அல்தாப் ஷேக்கை கைது செய்து நடத்திய விசாரணையில் தமிழகத்துக்கு அந்த குழந்தை கடத்தி செல்லப்பட்டு ரூ.4.8 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மும்பையில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினோம். அப்போது 4 ஆண்கள், இரு பெண்களை கைது செய்தோம். அவர்கள் குழந்தையை தமிழகத்தில் விற்பனை செய்ததாக தெரிவித்ததை தொடர்ந்து மும்பையில் இருந்து 2 தனிப்படை போலீசார் கடந்த 4 நாட்களாக 3 மாவட்டங்களில் அதிரடி வேட்டை நடத்தினர். அப்போது கோவை செல்வபட்டியில் ஒரு பெண் மற்றும் 4 ஆண்களை கைது செய்து குழந்தை மீட்கப்பட்டது. இந்நிலையில் இப்ராகிம் குழந்தையின் தாயாருடன் திருமணம் செய்யாமல் வசித்தது தெரியவந்தது. மேலும் அந்த குழந்தையின் தந்தை தான் தான் என்றும் இப்ராகிம் தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு டிஎன்ஏ சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 1ம் தேதி மாயமான குழந்தையின் தாயை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. மீட்கப்பட்ட குழந்தைகள் நல குழுவிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Source Dinakaran

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here