கனவை தேடிச்செல்லும் நாயகன்

0
29

கதாநாயகன் விதார்த் ஐடிஐ முடித்துவிட்டு காவல்துறையில் சேரவேண்டும் என்ற கனவோடு இருக்கிறார். கார்ப்ரேஷனில் பணிபுரியும் விதார்த்தின் தந்தை மாரிமுத்து, விதார்த் வேலைக்கு செல்லாமல் ஊர்ச் சுற்றி திரிந்து வருவதால் அவரிடம் கோபித்துக் கொள்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, விதார்த்துக்கு கனவில் வருகிற விஷயங்கள் நிஜத்தில் நடந்து அவருக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. இவரும் வேலைக்கு சென்று முதல் மாத சம்பளம் வாங்கும் சமயத்தில் கனவில் அவரின் தந்தைக்கு விபத்து ஏற்படுவது போல் தோன்றுகிறது. அதை தடுக்க முயற்சி செய்வதற்குள் அந்த விபத்து நடந்துவிடுகிறது.

விமர்சனம்

இது விபத்தல்ல கொலை முயற்சி என்று புரிய, இது ஏன் நடத்தப்பட்டது என்று தினம் தினம் கனவில் தேடி செல்கிறார். உண்மையில் இது கொலையா? இந்த கொலையை நிகழ்த்த காரணம் என்ன? கொலையாளிகளை கதாநாயகன் விதார்த் பிடித்தாரா? என்பதே இப்படத்தின் மீதிக்கதை.

கதாநாயகனாக நடித்திருக்கும் விதார்த்திற்கு இது 25-வது படம். இவருடைய 25வது படம் என்று பெருமையாக வெளியே சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இப்படம் அவருக்கு அமைந்திருக்கிறது. எதார்த்த நடிப்பில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

விமர்சனம்

இதுவரை துணை நடிகையாக நடித்த தான்யா இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவரின் நடிப்பு தனித்துவமாக இப்படத்தில் இடம்பெற்றிருக்கிறது. தன் பாணியில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். வில்லன் கதாப்பாத்திரத்தில் பயணித்த மாரிமுத்து இப்படத்தில் அழகான தந்தையாக இடம் பெற்றிருக்கிறார். இவருடைய நடிப்பு பேசப்பட்டு வருகிறது. இப்படத்தில் இடம் பெற்ற அனைவரும் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

அறிமுக இயக்குனர் ஆர்.ஸ்ரீனிவாசன் இப்படத்தை இயக்கியுள்ளார். கதையும் திரைக்கதையும் எந்த இடத்திலும் இவர் புதுபட இயக்குனர் என்று தோன்றும் படி இல்லை. திரைக்கதையை அழகாக கொண்டு சென்று இருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் இடம்பெறும் டுவிஸ்ட் ரசிகர்களை கைத்தட்ட வைக்கிறது.

விவேகானந்த் சந்தோஷ் சிறப்பான ஒளிப்பதிவை கையாண்டிருக்கிறார். சாம் சி எஸ்ஸின் பின்னணி இசை படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது.

மொத்தத்தில் ”கார்பன்” கவர்ந்தவன்.

Source Maalaimalar

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here